சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மானாமதுரை நீதிமன்றம் அருகே கடந்த ஜன.9-ம் தேதி மானாமதுரையைச் சேர்ந்த அருண்நாதன்(27), காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அருண்நாதன் இறந்தார். வினோத்கண்ணன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்து மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (20) உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த அக்னிராஜ் மானாமதுரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். இன்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியேறியவரை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். கொலையான அக்னிராஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ராஜராஜன், கூடுதல் எஸ்பி முரளிதரன் ஆகியோர் பார்வையிட்டு விசாரித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி