திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புனித மகிமை மாதாவின் திருக்கொடி அர்ப்பணிப்பு திருப்பணி முடிந்து பழவேற்காடு கடற்கரை மற்றும் முகத்துவாரம் வரை படகில் கொடி பவனி வந்து ஆலயம் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.பின் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் மற்றும் பங்கு தந்தை கே.ஜெ.வர்கீஸ் ரொசாரியோ தலைமையில் கொடி மரத்தில் சென்னை மயிலை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி மந்திரித்து கொடி பாடல் முழங்க ஏற்றி வைத்தார். அதன்பின் “ஊர் சமாதானத்திற்காக மன்றாடுவோம்” என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி இத்திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதாகவும் தினசரி பத்து நாட்களுக்கு திருப்பலி நடைபெற்று வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 4 ஆம் தேதி ஞாயிறு அன்றும் அன்னையின் ஆடம்பர தேர் திருவிழா நடைபெறும் என்றும் கத்தோலிக்க கிருஸ்துவ திருச்சபைகளின் தலைவர் மறைந்த போப்பாண்டவர் எப்போதும் கூறும் உலக அமைதி மற்றும் உலக மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்,சகோதர வாஞ்சையுடன், நீதி நேர்மையுடன் இருக்கவேண்டும் என்ற அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த ஆடம்பர திருவிழாவில் மகிழ்ச்சி நிலவட்டும் எனவும் தெரிவித்தார். இதில் பழவேற்காடு சுற்று வட்டார பகுதி மட்டும் அல்லாமல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு