திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று (24.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.இக்கூட்டத்தில் அடிதடி, ரௌடிசம், திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,
நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து, அரசு வழக்கறிஞரை அணுகி சாட்சிகள் விசாரணையை துரிதப்படுத்தி நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியும், மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடர்ச்சியாக விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, விபத்து குறித்து ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கை பதாகைகள் அமைப்பது குறித்து அறிவுரை வழங்கினார்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைப்பது குறித்தும், குறிப்பிட்ட நேரத்தில் விநாயகர் சிலைகளை எடுத்து சென்று ஆற்றில் கரைக்கவும், அனுமதியின்றி விநாயகர் சிலைகள் எங்கும் அமைக்க கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.முன்னதாக, ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.