திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது மற்றும் வள்ளியூர் காவல்துறையினர் முயற்சியில் வள்ளியூர் புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையிலும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலகம் திறப்பு விழாவானது இன்று வள்ளியூரில் நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப அவர்கள் தலைமையேற்று நூலகத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் வள்ளியூர் காவல் நிலைய காவல் துறையினர் பொதுமக்கள் நலனுக்காகவும், அரசு தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் நலனுக்காவும் முயற்சி செய்து அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தினை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறும், நூலகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
நூலகத்தை பொதுமக்கள் நலனுக்காக அமைத்துக் கொடுத்து காவல்துறை பொதுமக்கள் நண்பன் என நிரூபித்த வள்ளியூர் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங்மீனா, இ.கா.ப, வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது, வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ரவிக்குமார், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.