சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் கிராமத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10வது ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைரமணி விழா ஏற்பாடுகளையும், மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில் மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினர். இந்த ஆண்டு விழாவிற்கு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய அரசு பள்ளிகள் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளன.
அன்று நன்றாக படித்ததால் இன்று நான் இந்த உயர்ந்த உத்தியோகத்தில் உள்ளேன். நீங்களும் நன்றாக படித்து வரும் காலங்களில் உயர்ந்த உத்தியோகத்திற்கு வர வேண்டும். பெற்றோர்கள் தங்களது வேலையை விட்டு பள்ளிக்கு வந்து மாணவர்களின் திறமைகளை ரசிக்கின்றனர். அவர்கள் தியாகத்திற்காகவாது மாணவர்கள் முன்னேற வேண்டும் என காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து சமூக ஆர்வலர் கண்டரமாணிக்கம் மணிகண்டன் மாணவர்களுக்கு கல்வி குறித்து போதித்தார். இந்த விழாவில் பெற்றோர்கள் கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி