திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் (21.01.2026) அன்று திருப்பத்தூர் ஒஸ்மானியா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இணையவழி நிதி மோசடிகள், ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்களின் வகைகள் மற்றும் அவற்றிலிருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளங்களில் ஏற்படும் குற்றங்கள், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் w.cybercrime.gov.in மற்றும் இலவச தொலைபேசி உதவி எண் 1930 குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சைபர் குற்றங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் அமைந்தது.
















