திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டுகள் அங்கே புகுந்தனர். இதையடுத்து அங்கு தொடர்ந்து கண்காணிப்பு இருந்து வருகிறது.
மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் எஸ் .பி.க்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கொடைக்கானலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா தன்னார்வலர்கள் உதவியுடன் 115 மலைவாழ் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நக்சல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கினார். பின்பு எஸ்.பி பேசியதாவது பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
முக கவசம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். ஊரடங்கு விலக்கப்பட்ட பின்பு கடுக்காய் ,தேன் போன்ற மலைப் பொருட்களை எடுத்து உங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொள்ளலாம். கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், என்றார்.