தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில் (19.03.2023) தூத்துக்குடி மறைமாவட்ட சார்பாக, மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தின் இறைடியார் சூசைநாதர் ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்ல” அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்களை ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் கண்டறிந்து அவர்களை இந்த குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங் மற்றும் தியானம் போன்றவற்றை அளித்து அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல குடிமகனாக மாற்றுவதற்காக இந்த இல்லம் கட்டப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் திரு. ஸ்டீபன் அந்தோணி, மறைமாவட்ட முன்னாள் ஆயர் திரு. இவான் அம்புரோஸ், பெங்களூர் செபமாலைதாசர் சபை உயர்தலைவர் திரு. ஜஸ்டின் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவன் கோவில் குருக்கள் திரு. சிவகுமார், திரு. மணிகண்டன், வார்டு கவுன்சிலர் திருமதி. வைதேகி, பரதர் நலச் சங்க தலைவர் திரு. ரெனால்ட் வில்லவராயர் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி, உதவி ஆய்வாளர்கள் திரு. சிவகுமார், திரு. முகிலரசன், திரு. முத்தமிழரசன், பயிற்சி உதவி ஆய்வாளர் திருமதி. ராமலெட்சுமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. மாரிக்குமார் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.