தூத்துக்குடி : கோவில்பட்டி பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் ராஜன் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காவல்துறையினர், அனுமதி மறுத்த நிலையில், நேற்று அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தலைமையில் பொது செயலாளர்கள் வேல்ராஜா, சரவண கிருஷ்ணன், கிஷோர் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி கலையரசி, பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டு வந்தனர். இவர்களை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் பாபு, தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் திரு.வெங்கடேஷ், திரு.லோகேஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் திரு.சுஜித் ,திரு.ஆனந்த், திருமதி.பத்மாவதி, மற்றும் காவல்துறையினர் ,தடுத்து நிறுத்தினர். இதனால் அக்கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைகாவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி, மினிபஸ்சில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று காவல்துறையினர் கூறினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான, காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் ,குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த வகையில் நேற்று 2 இடங்களிலும் சாலைமறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 93 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யபட்டவர்கள் திட்டங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் விடுதலை செய்த பின்னரும் பா.ஜ.கவினர் வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து காவல்துறையினர் ,பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தினை பா.ஜ.கவினர் கைவிட்டனர்.