தூத்துக்குடி: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் (19.11.2022) சர்க்கரை நோய் விழிப்புணர்வு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நடைபெறுகிறது. சர்க்கரை நோய் என்பது அதிக இனிப்பை சாப்பிடுவதால் மட்டும் வரும் என்பதல்ல. உணவு பழக்கத்திலும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். உணவே மருந்து என்ற வார்த்தை அந்த காலத்திலேயே சொல்லப்பட்டது. அதன்படி முறையான உணவு பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். நாம் நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நன்றாக இருந்தால் மன நிலையும் நன்றாக இருக்கும். ஏனென்றால் இன்று பல பேர் அதிக மன அழுத்தம், கவலை போன்ற மனநிலை காரணமாக தற்கொலைக்கு முயல்கின்றனர். தற்கொலை எண்ணம் என்பது நமது மனம் நிலைத்தன்மை இல்லாமல் எதிர்மறை எண்ணங்களால் நமது உடலில் செரட்டோனின் என்ற வேதிப்பொருள் சுரப்பதனால் ஏற்படும் ஒரு மனநிலை மாற்றம். காய்ச்சல் தலைவலி போன்று தற்கொலை எண்ணமும் ஒரு வியாதிதான்.
எனவே இந்த எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்கள் மிக வலிமையானவை. நமது எண்ணங்கள்தான் வாழ்க்கை. இங்கே இருக்கும் ஒவ்வொரு சாதனையாளர்களும் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை விதைத்து முன்னேறி உள்ளனர். இந்த நல்ல எண்ணங்களுடன் வாழ்பவர்கள் நமது நிறைவு காலம் வரை மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியாகவும் வாழ முடியும். எனவே நேர்மறையான எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படுகின்ற சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தார் மற்றும் மற்றவர்களுக்கும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழச்சிகான ஏற்பாடுகளை சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பாக மருத்துவர் திரு. அருள்ராஜ் மற்றும் மருத்துவர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. அருள்ராஜ் மற்றும் திரு. நீலாம்புஜன், திரு. கண்ணன் உட்பட மருத்துவர்கள், மத்திய வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. விநாயகமூர்த்தி உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஐயப்பன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.