சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவோர், இ-பதிவு சான்றுகள் இல்லாமல் வாகனங்களில் செல்பவர்கள்,
முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் ஆகியோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்தவும் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் தற்காலிக வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கைகள் செய்து, கொரோனா வழிகாட்டுதல் எடுத்து வருகின்றனர்.
கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு சார்ந்த அமலாக்க பணியில் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளில் அர்ப்பணிப்புடன் பணிசெய்து வருவதால் பணி செய்யும் காவலர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சோர்வு மற்றும் உடல்நலம் கண்காணித்திட வேண்டி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னை பெருநகரின் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உள்ள காவலர் முதல் அதிகாரிகள் வரை அன்றாடம் முன்களப்பணியில் இருந்து வரும் காவல்துறையினருக்கு மருத்துவ வசதிகள், மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களுடைய உடல் நலம் பேணி பாதுகாக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இன்று (09.06.2021) காலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்.திரு. பிரதீப் குமார் இ.கா.ப அவர்கள், அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கான நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்து, ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு தொகுப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திரு.எஸ்.கணேஷ், இ.ஆ.ப., இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அண்ணா மருத்துவமனை, போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) திருமதி.ஆர்.லலிதா லஷ்மி,இ.கா.ப, போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு) திரு.எம்.எம்.அசோக்குமார், காவல் அதிகாரிகள், ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு.எஸ்.முத்து பழனியப்பன், மருத்துவ குழுவினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.