திருவாரூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K.ஜோசி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் (12.01.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்தல், சட்ட விரோத செயல்களான மணல் கடத்தல், அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளத்தனமாக மதுவிற்பனை மற்றும் கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்றவற்றை விற்பனை அல்லது கடத்துபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருட்களை மாவட்டங்களில் இருந்து முற்றிலும் ஒழித்திடும் பொருட்டு பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அறிவுரை வழங்கியும், எதிர் வரும் பொங்கல் பண்டிகை தொடர்பாக பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதோடு, குற்றங்களை முற்றிலும் தடுத்திடும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் கடைவீதிகளில் அதிகபடியான காவலர்களை ரோந்து பணிக்கு அனுப்பி கண்காணித்திடவும் அறிவுரை வழங்கினார்கள். இக்கூட்டத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.