கோவை: சட்டவிரோதமாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.
இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போலீசார் மாநகர பகுதிகளான பீளமேடு, பாப்பநாயக்கன் பாளையம், சித்தாபுதூர் ரத்தினபுரி, குனியமுத்தூர் ,கோவைப்புதூர், சரவணம்பட்டி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 208 மதுபாட்டில்கள் ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புறநகர் பகுதியான வாளையார், செடிமுத்துர்,கோபால புரம், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.இதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 53 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 404 மதுபாட்டில்கள், கார், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெட்டதாபுரத்தில் மதுவிற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து சப்இன்ஸ்பெக்டர்கள் திரு. செல்வநாயகம், தீலக் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.கங்காதரன், திரு.விஜயகுமார், போலீஸ்காரர் திரு.சசிக்குமார் மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த திரு.தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் திரும்பி செல்ல முயன்றது. உடனடியாக போலீசார் விரட்டி ஜீப்பை பிடித்து சோதனை செய்தனர். அதில் 96 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரமடை வெள்ளியங்கிரியை சேர்ந்த தமிழ்செல்வன் ( 32) மற்றும் அவரது தம்பி மகேஷ்குமார் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.