ஈரோடு: தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது.அதன்படி தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் செயல்படத் தொடங்கின.
ஆனால் தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் மது கடத்தலும், சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்ட காவல் துறை சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மற்றும் தடை செய்யப்பட்ட மது வகைகளின் விற்பனையை தடுக்கும் வகையில் கடந்த சில தினங்களாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் தொடர்ந்து மது கடத்தல், மது விற்பனையில் ஈடுபடுபவர்கள், அதிக அளவில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளவர்கள், ஏற்கனவே இதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.