மதுரை : மதுரை பைபாஸ் சாலையில், உள்ள முத்துப்பாண்டி தெரு பகுதியில் கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர். இந்த கார் ஒர்க் ஷாப்பில், நேற்று மதியம் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திடீர் நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள், தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. அருகில் இருந்த கேஸ் வெல்டிங் வைக்கும் சிலிண்டரில் தீ பரவி வெடித்து சிதறியது. இதில் ,ஐந்து கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
கேஸ் வெடித்ததில் தகர செட்டுகள் சுமார் 20 அடி தூரம் பறந்து அருகே உள்ள மரத்தில் தொங்கியபடி இருந்தது. மதுரை டவுன் தீயணைப்பு நிலைய மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் , மாநகராட்சி குடிநீர் வாகனமும் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சம்பவம் அறிந்த மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் துணை அலுவலர் பாண்டி ஆகியோர் சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த திடீர் தீ விபத்தினால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து, மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி