மதுரை சரக காவல் துணைத் தலைவர்அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை: இன்று காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி N. காமினி IPS அவர்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V பாஸ்கரன்., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்கள்.
அதன் பின்னர் ஆயுதப்படையின் படைக் கலங்கள், காவலர்களின் உடை பொருட்களை பார்வையிட்டு அவர்களின் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன், ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றும் போது காவலர்களுக்கான சமுதாய பொறுப்பு, முக்கியத்துவம் குறித்தும் பணிபுரிய வேண்டிய விதம் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.
மேலும், மதுரை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், மதுரை மாவட்ட ஆயுதப் படையில் இயங்கி வரும் சட்டவிரோத கூட்டத்தை தண்ணீர் பீச்சி கலைக்கும் வருண், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா, பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் பயன்படுத்தும் நடமாடும் கழிப்பறை வாகனம் முதலிய வாகனங்களையும் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொள்ள வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார்கள்.
சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வந்த வாகன ஓட்டுனர்களுக்கு வெகுமதி வழங்கினார்கள்.
மேலும் இந்த ஆய்வின்போது உடன் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. விக்னேஸ்வரன் காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.
மதுரை பைக்காரா புது மேட்டு தெரு 2-வது தெருவை சேர்ந்தவர் சேகர் 36. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக ஒத்தக்கடை அருகே பேராக்கூர் காலனியில் வசித்து வந்தார் .இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேகரின் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை பெண் கைது.
மதுரை செல்லூர் ஓடுகால் தெருவில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது 400 கிராம் கஞ்சாவுடன் அதை விற்பனை செய்த சாந்தி 56 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழ்ந்தவர் மனமுடைந்து தற்கொலை.
மதுரை திருப்பாலை டுவார்டு காலனி எட்டாவது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 44. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தார்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல ஜவுளி கடையில் தீ விபத்து ரெடிமேட் ஆடைகள் எரிந்து நாசம்.
மதுரை விளக்குத்தூண் பகுதியில் பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கில் ரெடிமேடு ஆடைகள் எரிந்து சாம்பலாயின.
விளக்குத்தூண் கீழமாசி வீதியில் பிரபல ஜவுளி கடை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் குபன்சிங்40. இவர் இங்கு மூன்று மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ரெடிமேடு ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை ஜவுளிக்கடைக்குள் இருந்து புகை மூட்டம் வெளியேறியது. இதை பார்த்த விளக்குத்தூண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கடைக்குள் தீ எரிந்து குபுகுபுவென்று புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது .
அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்குவந்து போராடி தீயை அணைத்தனர் .இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகளும் துணிகளும் எரிந்து சாம்பலாயின.
இதன் உரிமையாளர் வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த பிறகே உண்மையான சேத மதிப்பு தெரிய வரும் என்று தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விளக்குத்தூண்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.