நிதி நிறுவனத்தில்ரூ 5 லட்சம் திருட்டு.
மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி துரைசாமி நகர் நிதி நிறுவனத்தில் புகுந்து ரூபாய் 5 லட்சம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .
மேலூர் திருவாதவூர் ரோடு மல்லிகை நகரை சேர்ந்தவர் குருசாமி 49. இவர் எஸ் எஸ் காலனி துரைசாமி நகர் பகவதி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந் நிறுவனத்திலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்து 11 ஆயிரத்து 990 ஐ மர்மநபர் திருடிச்சென்றுவிட்டார் .இந்த திருட்டு குறித்து குருசாமி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
தொழிலதிபர் சாவு.காரணம் என்ன போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை காமராஜர் சாலை லாட்ஜில் தங்கியிருந்த தொழிலதிபர் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .கோவை சித்தாபுதூர் சரோஜினி தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் 67. இவர் நூற்பாலைக்கு தேவைப்படும் பாகங்களை விற்பனை செய்து வருகிறார்.
வியாபார விஷயமாக மதுரைக்கு வந்த சிவானந்தம் காமராஜர் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரது நண்பர் வினோத் குமார் அவரை சந்திக்க சென்ற போது சிவானந்தம் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் தெப்பகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது.
மதுரை: மதுரை விருது நகர் மாவட்டம் திருச்சுழி புல்வாய் கரையை சேர்ந்தவர் முருகன் மனைவி பஞ்சு 48. இவர்களுக்கு சொந்தமான வீடு அவனியாபுரம் வள்ளல் ஆனந்த புரத்தில் உள்ளது.
இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் இளையராஜா 27. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் வள்ளலானந்தபுரம் 9வது குறுக்கு தெருவில் சென்ற பஞ்சுவை வழிமறித்த இளையராஜா அவரை தகாத வார்த்தைகளால் பேசி காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பஞ்சு அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை எட்டி உதைத்த வாலிபர் இளையராஜாவை கைது செய்தனர்.
இளம் பெண்ணுக்கு ஆபாச வீடியோ வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.
மதுரை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அல்லா கோயில் தெருவைச் சேர்ந்த ஐம்பதுவயது பெண். அவரது மகளுக்கு வில்லாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கிழவன் மகன் ஆறுமுகம் 37 என்பவர் உறவினர் ஆவார்.இவர் அந்த பெண்ணின் மகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார்.
இது அப்பெண்ணின் தாயாருக்கு தெரியவந்தது. அவர் ஆறுமுகத்தை கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அந்தப்பெண்ணின் தாயாரை செருப்பால் அடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திமுனையில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது.
மதுரை: மதுரை அனுப்பானடி பகலவன் நகர் பூக்கார தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துக்குமார் 27. இவர் காமராஜர் சாலை 16 கால் மண்டபம் அருகே சென்றபோது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டினர்.
அவர்கள் முத்துக்குமாரி டமிருந்து ரூபாய் முன்னூரை பறித்துச் சென்று விட்டனர். இந்த வழிப்பறி குறித்து முத்துக்குமார் தெப்பகுளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐராவதநல்லூர் சூசையப்பர் தெருவைச் சேர்ந்த பெர்னான்ட் செபஸ்டின் மகன் சேக்கப் ஆபிரகாம் மில்டன் 24. ஆண்டார்கொட்டாரம் கல்மேடு கார்த்திகை செல்வன் மகன் தமிழ்மாறன் 27 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெற்ற தாயிடம் தகராறு தட்டிக்கேட்ட அண்ணனுக்கு அரிவாள் வெட்டுதம்பி கைது.
மதுரை: மதுரை முத்துப்பட்டியில் பெற்ற தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் ஜியான் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியஜெய முத்து 28. இவருடைய தம்பி ரோஜர் அதிர்ஷ்ட முத்து 27. இவர் முத்துப்பட்டி வீரமுடையான் 4-வது குறுக்குத் தெருவில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.
இவர் தன்தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.இதை அறிந்த அண்ணன் ஆரோக்யஜெயமுத்து தம்பியை கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை தாக்கி அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து அண்ணன் ஆரோக்கிய ஜெயமுத்துகொடுத்த புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பி ரோஜர் அதிர்ஷ்ட முத்துவை கைது செய்தனர்.
கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு:
மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, இவர் கேமரா சர்வீஸ் சென்டரை ,மதுரை நேதாஜி ரோடு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கரும்புகை வெளியேறியது.
உடனே, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு போலீசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, கேமரா சர்வீஸ் சென்டரில் விலை உயர்ந்த கேமரா மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், லட்ச மதிப்பிலான கேமரா மற்றும் உபகரணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, கடையில் உள்ள மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி