மருத்துவமனையில் செக்யூரிட்டி மீது தாக்குதல்
மதுரை : மதுரை வாடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர் மகன் ஆறுமுகம் (36), இவர் பனகல் சாலையில் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருந்த போது மருத்துவமனையின் முன்பாக சிலர் பாதையை மறைத்து நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை சற்று தள்ளி இருக்கும்படி கூறியுள்ளார். இதனால், ஆசிரமடைந்த இரண்டு பேர் அவரை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து, ஆறுமுகம் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, செக்யூரிட்டி ஆறுமுகத்தை தாக்கியவர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.
மற்றொரு காவலாளி மீது தாக்குதல் இரண்டு பேர் கைது: மேலூர் பூசாரிப்பட்டி முத்துப்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (49), இது புதுராம்நாட்ரோட்டில் லாரி எடை போடும் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் . அங்கு போதையில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய கரிமேடு அய்யனார் நகர் நாகூர் மகன் செரிப் (19), அண்ணாநகர் மல்லிகை தெரு சுந்தரம் மகன் சூர்யா 19 இருவரையும் கைது செய்தனர்.
குடிபோதையில் தவறி விழுந்த முதியவர் பலி!
வண்டியூர் சௌராஷ்டிராபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (68) இவர் குடிபோதையில் வீட்டின் படிக்கட்டில் ஏறிய போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, அவருடைய மகள் சபிதா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவர் நாகேந்திரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் வாளுடன் வாலிபர் கைது!
அவனியாபுரம் போலீசார் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார் .அவரை போலீசார் விரட்டி பிடித்தனர் .பிடிபட்ட வாலிபரை சோதனை செய்தபோது அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார் .அந்த வாளை பறிமுதல் செய்தனர்.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் உசிலம்பட்டி அய்யம்பட்டி ஒச்சா தேவர் மகன் சந்திரமோகன் என்ற சந்திரசேகர் (39), என்று தெரியவந்தது. அவர் வழிப்பறி உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்துடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சாவுடன் வாலிபர் கைது
(17)தல்லாகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் முல்லை நகர் கண்மாய்க்கரை பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தார். அவரிடம் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து முல்லை நகர் விஜயராஜ் மகன் ராஜசேகர் என்ற ரவுடி ராஜா (30) என்பவரை கைது செய்தார்.
லாட்டரி விற்பனை ஒருவர் கைது
வில்லாபுரம் மீனாட்சி நகர் தனியார் மருத்துவமனை அருகே ஒருவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார். லாட்டரி நம்பர்கள் கொண்ட அட்டையை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் சென்ற அவனியாபுரம் போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் இருந்த நம்பர் சீட்டுகளையும் பறிமுதல் செய்து அவர் விற்பனை செய்த பணம் ரூ. ஐநூறையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வில்லாபுரம் மீனாட்சி நகர் சுபாஷ் தெரு சரவணன் (49), என்று தெரிய வந்தது அவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி