வைகை தென்கரையில் வாளுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது!
மதுரை : திலகர்திடல் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன், இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் .அவர் வைகை தென்கரை அனுமார் கோயில் படித்துறை அருகே சென்றபோது போலீசை கண்டதும் நான்கு பேர் ஓடிச் சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார் .பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20) ,அதே பகுதியைச் சேர்ந்த பாரதி மகன் பூமிநாதன் (23), சுடு தண்ணீர் வாய்க்கால் தெருவை சேர்ந்த ராமர் என்ற யுவராஜ்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ் குமார் (20), ஆகியோர் என்று தெரிய வந்தது .அவர்களிடம் சோதனை நடத்தினார். சோதனையில் அவர்கள் மூன்று வாள்களை மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
பொது இடத்தில் கையில் வாளுடன் மிரட்டல் வாலிபர் கைது!
கே புதூர் பாண்டியன் நகர் 11வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் செவத்த பாண்டி (24), இவர் அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் கையில் வாளுடன் நடுத்தெருவில் நின்று பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்த வாலிபர் செவத்தப்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து நீண்ட வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
மூன்று பசு மாடுகள் மின்சாரம் தாக்கி பலி!
திருப்பரங்குன்றம் சின்ன கருப்பன் சந்து வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சை மகன் காமேஷ்வரன் 36. இவருக்கு சொந்தமான மூன்று பசு மாடுகளை மலையாண்டி சாமி கோயில் பின்புறம் மேய விட்டிருந்தார். அப்போது அந்த மாடுகள் அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் உரசியபோது அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மின்சாரம் தாக்கி மூன்று மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து காமேஸ்வரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பசு மாடுகளின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை!
உத்தங்குடி உலக மேரி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அம்மாசி மகன் சாமிக்கண்ணு (37), இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் காரர்கள் நெருக்கடி கொடுக்கவே கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் திண்டாடினார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிக்கண்ணுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீ.பி. குளத்தில் வழிப்பறி 2 பேர் கைது!
இந்திரா நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஆண்டி மகன் சுரேஷ் (29), இவர் வைகை தெருவில் சென்று கொண்டிருந்தார் அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள் வாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ் தல்லாகுளம் போலீஸில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராஜாக்கூரை சேர்ந்த முத்துக்குமார் மகன் செந்தூர் வேலன் என்ற சசிகுமார் (19), இந்திரா நகர் முதல் தெரு முல்லை நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் ஆனந்தபாண்டியன் (27), இருவரையும் கைது செய்தனர்.
மனைவியை மண்வெட்டியால் தாக்கிய கணவர் கைது!
அவனியாபுரம் பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (50), இவருடைய மகனுக்கு வீட்டு கடன் வாங்குவது தொடர்பாக முயற்சி செய்து வந்தனர். இதற்கு கணவர் கதிரேசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கணவர் கதிரேசன் மண்வெட்டியால் மனைவி ஜெயலட்சுமி தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து ஜெயலெட்சுமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு மனைவியை தாக்கிய செய்து கணவர் கதிரேசனை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி