அவனியாபுரத்தில் போதை வாலிபர் கைது
மதுரை : வனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (49) .அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (40), சசிகுமார் சம்பவத்தன்று குடிபோதையில் முனியாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளும் நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் முனியாண்டியை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து முனியாண்டி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சசிகுமாரை கைது செய்தனர்.
மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!
திருப்பரங்குன்றம் பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் (47), இவருடைய மகன் ஆறு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து சுரேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மன வருத்தத்திலும் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி தனலட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாளுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
விளக்கத்தூண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். முனிச்சாலை ஓபுளா படித்துறை பனையூர் கால்வாய் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய இரண்டு வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தார். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முருகன் மகன் சதீஷ் பாண்டி (22), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நாடார் கிழக்கு தெருவை சேர்ந்த ஜோதிபாசு மகன் கார்த்திகேயன் (20), என்று தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தனர். அவர்கள் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை!
மேலமாசிவீதியில் பிரபல நகைக் கடை உள்ளது. சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு ஆசாமிகள் நகை வாங்குவது போல் நடித்து வாங்காமல் சென்று விட்டனர். பின்னர் விற்பனைக்கு வைத்திருந்த நகைகளை எண்ணிப் பார்த்தபோது அந்த நகையில் ஒரு பவுன் தங்க மோதிரம் திருடுபோனது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கடையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு ஆசாமிகள் அந்த மோதிரத்தை திருடியது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து நகைக்கடையின் நிர்வாகி அவனியாபுரம் திருப்பதி நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்கடையில் கைவரிசை காட்டிய திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி