சாலையில் வீசப்பட்ட நோயாளி!
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை எதிரில் ஒருவர் காலில் பெரிய புண் புரையோடிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, எறும்பு மொய்த்த நிலையில் ரோட்டில் வீசப் பட்டு கிடந்தார். இவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்க பட்டு காலில் புண் ஏற்பட்டு கடந்த மாதம் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில், புண் புரையோடி கால் அழுகிய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் பிணவறை எதிரில் உள்ள ரோட்டில் அவரை வீசி சென்றது. இது பற்றி தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சி மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தலைமையில் தாமரை சேவகர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் பா. ஜ. க பொருளாதார பிரிவு மாவட்ட தலைவருமான வழக்கறிஞர். முத்துக்குமார், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர். சாம்சரவணன், மாவட்டச்செயலாளர் சுல்தான், ஆகியோர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அன்று மாலையே அவரை வார்டிலிருந்த ஊழியர்கள் மீண்டும் அதே இடத்தில் வீசி விட்டு சென்று விட்டனர். மீண்டும் தாமரை சேவகர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கறிஞர். முத்துக்குமார் மருத்துவமனை முதல்வரிடம் எழுத்து பூர்வமாக அளித்த புகாரில்: உடனிருந்து கவனித்து கொள்ள ஆள் இல்லாததை காரணம் காட்டி மருத்துவமனை நிர்வாகம் பலரை வலுக் கட்டாயமாக வெளியேற்றி விடுகின்றனர். மேலும் ,அவர்கள் தப்பி சென்று விட்டதாக ஆவணங்கள் தயார் செய்து விடுகின்றனர். வெளியே வீசப் பட்டவர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் இறந்தவுடன் அவர் அடையாளம் தெரியாதவர் என, அடக்கம் செய்ய படுகிறார்கள் என்று புகாரில் கூறியிருந்தார்
இனி வருங்காலத்தில் இது போன்ற மனித உரிமை மீறிய செயல்களில் மருத்துவ மனை நிர்வாகம் ஈடுபட்டாலோ, உடனிருந்து கவனித்து கொள்ள ஆள் இல்லையென்று அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி மறுத்தாலோ சம்பந்த பட்டவர்கள் மீது மனித உரிமையை மீரியதற்காகவும் , கடமையில் இருந்து தவறியதற்காகவும், போலியான ஆவணங்கள் உருவாக்கியதற்காகவும் அரசுக்கு முறையீடு செய்ய பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள் உட்பட நான்கு பேர்கள் மீது மருத்துவமனை முதல்வர் ஒழுங்கு நடவடிக்கை எடுதுள்ளார்.
நடந்து சென்ற பெண்ணிடம் பைக் ஆசாமிகள் கைவரிசை!
பரவையில் கோவில் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிக்கமுயன்றபோது பறிக்க விடாமல் போராடியநிலையில் இரண்டு துண்டானது. பரவை சந்தோஷ் அவன்யூவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி சசிகலா (46), இவர் திண்டுக்கல் ரோடு வழிவிடும் பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த சங்கிலியை பிடித்து இழுத்தனர். அவர்களை பறிக்கவிடாமல் சசிகலா போராடினார். அப்போது சங்கிலி இரண்டு துண்டானது. இதில், ஒருபகுதி சசிகலாவின் கையிலும் மற்றொரு பகுதி பைக் ஆசாமிகள் கையில் சிக்கியது. இதில் இரண்டரை பவுன்எடைகொண்ட துண்டு செயினுடன் பைக் ஆசாமிகள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மாட்டுத்தாவணி எதிரே கத்தி முனையில் வழிப்பறி!
அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் மகன் நாகராஜ் (42), இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று மாட்டுத்தாவணி எதிரே ஒயின்ஷாப் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த ஆசாமி அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ 650 ஐ பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து நாகராஜ் கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகைநகர் இரண்டாவது தெரு வைரவசுந்தரம் மகன் பாலமுருகன் என்ற குண்டுமணி பாலா (33) என்பவரை கைது செய்தனர்.
இளம் கர்ப்பிணி பெண் தற்கொலை!
மதுரை பைபாஸ் ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிருதிவிராஜ் மனைவி உதயா (21) இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உதயா கர்ப்பமானார் இந்நிலையில் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். திருமணமாகி இரண்டு மாதத்திற்குள் இதுபோன்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உதயா மனமுடைந்து காணப்பட்டார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதயாவின் அம்மா வனிதா எஸ்.எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ப்பினிப்பெண் உதயாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கையில் வாளுடன் வாலிபர் கைது!
மதுரை தெற்கு வாசல்கிருதுமால்நதி நதி ரோட்டில் ஒயின்ஷாப் அருகே கையில் வாளுடன் வாலிபர் ஒருவர் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தார். இந்த தகவல் தெற்கு வாசல் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவி இடத்திற்கு சென்று அந்த வாலிபரை சுத்தி வளைத்து பிடித்தனர். அவர் கையில் இருந்த வாலையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முருகன் மகன் சண்முகம் என்ற வேல் (27), என்று தெரிய வந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் சிக்கி மதுரை வாலிபர் பலி!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை, வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (24), இவரது நண்பர் வெள்ளைக்கல் பகுதியைச் சேர்ந்த அஜய் (23), நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு வந்துவிட்டு, மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கத்தாளம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, திடீரென்று இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றது. இதில் நிலை தடுமாறிய வசந்தகுமார், வண்டியிலிருந்து தவறி கிழே விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஜய் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த அஜயை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தகவலறிந்த ரெட்டியாபட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த வசந்தகுமார் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி