சுடுகாட்டு ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது!
மதுரை : மதுரை பாக்யநாதபுரம், சர்ச் தெருவை சேர்ந்தவர் சேகர் (60), இவர் தத்தனேரி சுடுகாட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தத்தனேரி, சிவகாமி நகர் நாகராஜ் மகன் கார்த்திக் என்ற கிடாரி (23), இவரும் அதே சுடுகாட்டில் ஊழியராக உள்ளார். இந்த நிலையில் சேகர், கார்த்திக் ஆகிய 2 பேரும் நேற்று மதியம் ஒன்றாக உட்கார்ந்து மதுபானம் அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக சேகர், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் என்ற கிடாரியை கைது செய்தனர்.
நரிமேடு பகுதியில் மூன்று பேர் கைது!
மதுரை கீழத்தோப்பை சேர்ந்தவர் முனுசாமி (49), இவர் நேற்று காலை நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஔவையார் தெரு, ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பதுங்கி இருந்த 4 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது. இது தொடர்பாக முனுசாமி, தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜபுரம், குமரன் தெருவை சேர்ந்த சோலை மகன் வீரபாண்டி (23), கோரிப்பாளையம், மாரியம்மன் கோவில் தெரு முகமது இஸ்மாயில் மகன் சேக் முகமது (21), நரிமேடு, தென்றல் நகர் தமிம் அன்சாரி மகன் முகமது ஷாஜகான் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய நரிமேடு சபீக் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
வலிப்பு நோயாளி சாவு!
மதுரை நரிமேடு, முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (35), இவருக்கு தீராத குடிப்பழக்கம் உண்டு. திருமணம் ஆகவில்லை. ஆனந்துக்கு வலிப்பு நோய் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் நேற்று காலை வீட்டில் உட்கார்ந்து மதுபானம் அருந்தினார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரி கண்ணாடியை உடைத்தவர் கைது
மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (45), இவர் சம்பவத்தன்று மாலை அரசு ஆஸ்பத்திரி பிரேத கிடங்குக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும் கல்மேடு அம்பேத்கார் நகர், ஜெகன் (32), என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகன், அரசு ஆஸ்பத்திரி ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெருமாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது!
கரிமேடு போலீசார் நேற்று மாலை பெத்தானியாபுரம், மேட்டு தெருவில் ரோந்து சென்றனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே 2 பேர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெத்தானியாபுரம், கருமாரியம்மன் கோவில் தெரு சுறா விஜய் (28), சின்னதம்பி தெரு சதீஷ்குமார் (35), ஆகிய 2 பேரை கஞ்சா விற்றதாக, கரிமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி