வாலிபரை தாக்கிய பூக்கடைக்காரர் கைது
மதுரை : மதுரை மூலக்கரை, தியாகராஜா காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் சம்பவத்தன்று இரவு திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள பூக்கடை அருகே, வாலிபர் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன், திருநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் பாலகிருஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பூக்கடை ஊழியர் ஒருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து சென்று விசாரித்தனர்.
இதில் அவர் நிலையூர், கருவாட்டு பாறை, பாண்டி மகன் பாலமுருகன் (வயது 21) என்பது தெரிய வந்தது. பாலகிருஷ்ணன் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் பாலமுருகன் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக பூக்கடைக்காரர் தாக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திருநகர் போலீசார் பூக்கடை ஊழியர் பாலமுருகனை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேப்பர் குடோன் தீ வைத்து எரிப்பு!
கீழவெளி வீதியை சேர்ந்தவர் சிவபாலன் (53), இவர் அந்த பகுதியில் பேப்பர் கவர் குடோன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு சம்பவத்தன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த பேப்பர் பண்டல்கள் எரிந்து கருகின. இது தொடர்பாக சிவபாலன், விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். அதில் “பேப்பர் குடோனை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கர ஆயுதத்துடன் ரவுடி கைது!
மதுரை தெற்கு வாசல் போலீசார் காஜா தெருவில் ரோந்து சென்றனர். அப்போது இதே பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற விக்னேஷ் என்ற அப்பள விக்கி (29) என்பவரை சோதனை செய்தனர்.அவரிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றைபறிமுதல் செய்தார்.. இதனைத் தொடர்ந்து அப்பள விக்கியை, தெற்கு வாசல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு வியாபாரி கைது!
மதுரை மதிச்சியம் போலீசார் நேற்று வைகை வடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஆழ்வார்புரம் அப்துல் ஹமீது (28), என்பவர், நடை பாதையை ஆக்கிரமித்து மணல் கொட்டி வைத்து இருந்தது தெரியவந்து. எனவே அவரை மதிச்சியம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைபாஸ் ரோட்டில் ஒரிசா வாலிபர் கைது!
கோவிலூரை சேர்ந்தவர் ராம்பாபு (51), இவர் நேற்று காலை அரசு பஸ்ஸில் மதுரைக்கு வந்தார். அப்போது குரு தியேட்டர் பஸ் நிலையம் அருகே, உடன் இருந்த வாலிபர் ஒருவர் செல்போனை பறித்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது ராம்பாபு கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, அந்த வாலிபரை பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் குற்ற பலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரங்கா பதான் (35) என்பது தெரிய வந்தது. அவரை கரிமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி