கடை மீது சரமாரி கற்கள் வீச்சு, நான்கு சிறுவர்கள் கைது!
மதுரை : ஜெய்ஹிந்த்புரம் சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டி (29), இவர் அந்த பகுதியில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சுந்தர்ராஜபுரம் எல்எல்ஆர் ரோட்டில் ஆறு சிறுவர்கள் மது பாட்டிலை உடைத்துள்ளனர். இதை சௌந்தரபாண்டியனின் மாமனார் கண்டித்துள்ளார். இதனால் அவரை அவர்கள் தாக்கி உள்ளனர். இதை அறிந்த சவுந்தர பாண்டி அந்த சிறுவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சௌந்தரபாண்டியன் ஸ்வீட் கடை மீது கற்களை வீசி அவரையும் தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் குறித்து அவர் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு சிறுவர்களை கைது செய்தனர் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
மிரட்டி பணம் பறிப்பு, ஒருவர் கைது!
மதுரை கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர் (35), இவர் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே பாத்ரூம் அருகே சென்றபோது அழகரடி மூன்றாவது தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ராகு காலம் (49) என்பவர் நீண்ட வாள் ஒன்றை காட்டி மிரட்டி சேகரி டமிருந்து ரூ 500 ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து சேகர் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பதிவு ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
மூன்று பைக் ஆசாமிகள் கைவரிசை!
மதுரை பைபாஸ் ரோடு தீக்கதிர் பின்புறம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல் (38), இவர் திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடியில் ஒர்க்ஷாப் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற மூன்று ஆசாமிகள் அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துவேல் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில், சூதாடிய 5 பேர் கைது!
திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் துர்கா காலனி ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைத்தறி நகர் பாலச்சந்தர் மகன் கிருஷ்ண சந்துரு (30), நிலையூர் கைத்தறி நகர் அய்யாதுரை மகன் ராஜுவ் (33) ,நிலையூர் கைத்தறி நகர் ஜெகநாதன் (47), உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை வாங்குவது போல் நடித்து செயின் திருட்டு!
முனிச்சாலை இஸ்மாயில் புரம் பனிரெண்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் 53. இவர் வடக்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து சென்று விட்டனர்.பின்னர் நகைகளை சரி பார்த்தபோது ஒரு பவுன் 750 மில்லி கிராம் எடை கொண்ட தங்க செயினை காணவில்லை. இதை அந்த பெண்கள் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக கார்த்திகேயன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்திருடிய இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.

திரு.ரவி