மதுரை : மதுரை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே செயல்பட்டு வரும் இருசக்கர வாகன காப்பகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய 8 இருசக்கர வாகனங்கள், 8 சைக்கிள்கள் என 16 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பானடி நிலைய அலுவலர் கந்தசாமி தலைமையில் ஆன மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையினர் தீ தடுப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்தினர். தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சம்பவம் குறித்து , போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர் கூறுகையில், ரயில்வே பார்க்கிங்கில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதோடு மட்டும் போதிய கவனம் செலுத்துவதாகவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் திறந்த வெளியிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், வெயில் நேரங்களில் பெட்ரோல் டேங்கில் சூடு ஏற்பட்டு தீ விபத்து அதிக அளவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் , ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன நிறுத்த ஒப்பந்த தாரிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என , கோரிக்கை விடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி