நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து மது விற்பனையை தடுக்க காவல்துறையினர், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ஊட்டி புதுமந்து காவல்ஆய்வாளர் திருமதி.அல்லிராணி, உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அத்திகல் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து வேனில் சோதனை செய்தபோது, டாஸ்மாக்கில் வாங்கி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் வேனில் இருந்தவர்கள் கோவையை சேர்ந்த சுரேஷ், சோலூரை சேர்ந்த ஆசிக் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வேனில் இருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்பு இருந்த முக்கிய குற்றவாளியான கூக்கள் பகுதியை சேர்ந்த போஜன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.