கோவை: கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள காசி கவுண்டன் புதூர் டாஸ்மாக் கடையில் (எண் 1836) கடந்த 3ஆம் தேதி மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து 902 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வந்தனர். நேற்று சூலூர் கண்ணம் பாளையத்தை சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 79 மதுபாட்டில்கள் 4 செல்போன் ,லேப்டாப், 2பைக் ,ரூ 72 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இவர் நேரு நகர் ,காங்கயம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில், நடந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது .இதேபோல சம்பத்குமார் ( வயது 42) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.