திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில், (31.08.2022) ம் தேதி அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா & (02.09.2022), அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் & பிற மதத்தினரை சார்ந்த முக்கிய நபர்களுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் (02.09.2022), அன்று நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் காவேரி ஆற்றில் சிலை கரைப்பின் போது சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும், அமைதியான முறையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைவைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் (02.09.22), தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு சுமார் 1500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
ஊர்வலத்தின் போது முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரச்சனைகுரிய இடங்கள் கண்டறியப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் (02.09.22), ந்தேதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி ஊர்வலம் செல்ல, அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை அனைவரின் ஒத்துழைப்போடு எவ்வித அசம்பாவிதமுமின்றி சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்திட திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பான முறையில் பாதுகாப்பு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி காவல் அதிகாரிகள் & காவல் ஆளிநர்களுக்கு பணிநியமிக்கப்பட உள்ளதாகவும், மேற்படி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.