வேலூர் : வேலூர் வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு, ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (66), இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதே மில்லத் அரங்கத்துக்குள் வரிசையில் சென்றார். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் தான் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை அங்கிருந்த மேசையில் வைத்து தன் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அதிகாரிகள் திடுக்கிட்டனர். தகவல் அறிந்ததும் அங்கிருந்த காவல்துறையினர், அவரை வெளியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் கூறுகையில், ”எனது நிலம் மற்றும் வீட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து மணலை குவித்து உள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.
எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனவேதனை அடைந்த நான் மனு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெட்ரோல் பாட்டிலுடன் வந்தேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை என்றார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கலெக்டர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு மனு கொடுக்க வருபவர்களையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகின்றனர். அதையும் மீறி ஒருவர் பெட்ரோல் கேனை மறைத்து எடுத்துச்சென்று அதுவும் குறைதீர்வு கூட்டத்தில் இருந்த அதிகாரிகளின் மேஜை மீதே அதனை வைத்த சம்பவம் பரபரப்பைவ ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில்மக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது காவல்துறையினர், தீவிர சோதனை செய்தபின்னரே கூட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.