ஈரோடு : ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் (9-2-2023) (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் தைப்பூச மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். மகா தரிசன நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு
திரு.சசிமோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் அண்ணாதுரை (பெருந்துறை), கோபாலகிருஷ்ணன் (திருப்பூர்) மற்றும் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர், கொடுமுடி, மலையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் 9 இன்ஸ்பெக்டர்கள் (மதுவிலக்கு உட்பட), 40-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மகா தரிசனத்திற்கு வரும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் யாராவது நடந்து கொண்டால் அவர்களை கையும், களவுமாக பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும் வகையில் சாதாரண உடைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மகா தரிசனத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் சென்னிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக காங்கேயம் செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் சின்னப்பிடாரியூர், நாமக்கல்பாளையம், தண்ணீர் பந்தல், இரட்டை பாலம்,
பசுவபட்டி வழியாக சென்று காங்கேயம் ரோட்டை அடைய வேண்டும். பெருந்துறை ஆர்.எஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் இதே வழியை பின்பற்ற வேண்டும். அதேபோல் காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக பெருந்துறை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் வெப்பிலி பிரிவில் மேற்கே சென்று அய்யம்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், ஓட்டப்பாறை மற்றும் அப்பத்தாள் கோவில் வழியாக ஈங்கூர் ரோட்டை அடைய வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் சாமிகள் திருவீதி உலா முடிந்து கைலாசநாதர் கோவிலுக்குள் செல்லும் வரை நீடிக்கும். இந்த தகவலை சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சரவணன் தெரிவித்தார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :