விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (45), இவரது மனைவி ரேவதி (38), முனீஸ்வரன் திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும், ரேவதி தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகள் ஒருவர் இருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பராமரிக்க முனீஸ்வரன், ரேவதி இருவரும் சிரமப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தங்களது மகளை, குலதெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று, மகள் வாயில் விஷத்தை ஊற்றியுள்ளனர்.
இதனால் சிறுமி அலறியுள்ளார். உடனடியாக அங்கு வந்தவர்கள் இதனைப் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் , உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மல்லி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், பெற்ற மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பொறியாளர் முனீஸ்வரன், பேராசிரியர் ரேவதி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறனார். மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பெற்றோருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி