தூத்துக்குடி : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3வது மைல் அருகில் 392 குடியிருப்புகள் உள்ளன. ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். மேலும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
ஏற்கனவே குடியிருப்புகளின் நுழைவாயிலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுவதற்கு வசதியாக சோப்பு, தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்டு சுத்தம் செய்த பிறகே உள்ளே செல்கின்றனர். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் காவலர் குடியிருப்பு நுழைவாயிலில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை’ அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூபாய் 80,000/- மதிப்பிலான இந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் சகாய மாதா சால்ட் ஆகிய இரு நிறுவனங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் சென்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் உள்ளே நுழையும் முன் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவிய பிறகு இந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதை வழியாக உள்ள செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கிருமி நாசினி தெளிப்பான் பாதையை இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மேலாளர் அப்துல் ரஹ்மான், மணிகண்டன், தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் மற்றும் தென் பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.