சென்னை : பொதுமக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்புப் பணியிலும், இரவு பகல் பாராது பணி செய்து வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது குடும்பத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் சிறப்பான முயற்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்கல்வி மற்றும் இதர கல்வி தகுதிகளுடன் கூடிய வாரிசுகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றார். மதுரை காவல் ஆணையராக பணியாற்றிய போது திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் சீரிய முயற்சியால், தமிழகத்தில் முதன்முறையாக காவல் அதிகாரிகளின் வாரிசுகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அனேக இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளியேற்றினார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஒருங்கிணைந்து கடந்த நவம்பர் 03 முதல் 05ம்தேதி வரை காவல் அதிகாரிகள் வாரிசுகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்தினார்.
ஆதரவற்ற மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு கல்வியும், தொழில் பயிற்சியும் வழங்கி அவர்களுக்கு புது வாழ்வளிக்கும் திட்டம் தான் பாய்ஸ் கிளப். தமிழக காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த சிறுவர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இந்த பாய்ஸ் கிளப் துவங்கப்பட்ட நாள் முதல், நம் தமிழக காவல்துறையினர் சிறப்பாக நிறுவி சிறுவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
இதன்மூலம் சிறுவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைத்தும், மேலும் சிறுவர்களின் சிந்தனையை அதிகரிக்கும் வகையிலும் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் நோக்குடன் பல்வேறு விதமான புத்தகங்கள் இந்த சிறுவர் மன்றத்தில் இடம் பெறுகின்றன. இதனை சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பயன் பெறுகின்றனர்.
பள்ளிகளுக்குச் செல்ல முடியாத சிறுவர்களை ரவுடிகள் அவர்களை கேங்கில் இணைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மது, கஞ்சா, பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறார்கள். இதனால் புதிய ரவுடிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சிறுவர்கள் ரவுடிகளாக மாறாமல் தடுப்பதற்காகவும், காவல்துறையினருக்கு உதவுவதற்காகவும் ‘பாய்ஸ் க்ளப்’ தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பள்ளிக்குச் செல்ல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நல்லாட்சி கூட்டமைப்பு இயக்கம் சார்பாக, சென்னை பெரம்பூர் அடுத்த ராஜீவ் காந்தி நகரில் உள்ள மக்களுக்கும் அங்கு வசிக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அங்கு வசிக்கும் சிறுவர் சிறுமியருக்கு இலவச செல்போன், இலவச மடிக்கணினி மற்றும் இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து, அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு பாய்ஸ் கிளப் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் மின்னிதழின் முதன்மை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட வர்த்தக அணி பிரிவு தலைவரும், நல்லாட்சி கூட்டமைப்பு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.பினு தாமஸ் ஆகியோர் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்களை சந்தித்து ராஜீவ் காந்தி நகரில் போலீஸ் பாய்ஸ் கிளப் துவங்குவது சம்பந்தமாக கலந்துரையாடியனார்கள்.