திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனைச் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது.
பாலா விஹார் 1953 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கப்பட்டது. கில்பாக், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகமாக திகழ்ந்து வருகின்றது. இங்கு பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை, பேச்சு சிகிச்சை, நடத்தை மாற்றம் சிகிச்சை, யோகா, ப்ளே தெரபி, மியூசிக் தெரபி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு சிகிச்சைகள் அடங்கிய ஒரு தனித்துவமான சிகிச்சை முறை அளிக்கப்பட்டுவருகின்றது. இத்தகைய சிகிச்சை மூலம் மனநலம் குன்றியவர்களின் கல்விசார் சமூக திறன்கள், உடல் மற்றும் மன விழிப்புணர்வு மற்றும் ஆளுமையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.
இத்தகைய நல்ல நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்திற்கு மறுவாழ்வு மையத்திற்கு மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு, தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, 21.07.2021 அன்று புதன்கிழமை வேப்பம்பட்டில் அமைந்துள்ள பாலவிஹர் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அதனை சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில், மதிய உணவு, முட்டை, கேசரி உடன் வழங்கப்பட்டது.
மேலும் மாலை சிற்றுண்டியாக பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் 140 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) திருமதி.மீனாட்சி அவர்கள் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். ADSP திருமதி.மீனாட்சி அவர்கள், திருவள்ளூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் பொறுப்பு ஏற்றது முதல், அப்பகுதியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், திராவகம் வீச்சு, கௌரவ கொலைகள், தற்கொலை, கடத்தல், வரதட்சிணைக் கொடுமை, கருக்கொலை, பெண்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்து மீறல் உள்ளிட்டவற்றை தனது விரைவான செயல்பாடுகள் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் வெகுவாக குறைத்துள்ளார்.
திருவள்ளூர் DSP திரு.சந்திரதாசன் அவர்கள், செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு.ஜோசப் செல்வராஜ் ஆகியோர் விருந்தில் பங்கேற்று மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு உணவு பரிமாறி நிகழ்வில் பங்கேற்றனர். காப்பக சிறார்களுக்கு தேவையான முககவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.