தர்மபுரி: போலீஸ் அக்கா’ திட்டத்தை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.E.S.உமா,I.P.S., அவர்கள், தர்மபுரி ஆட்சி தலைவர் திரு.R.சதீஷ்,IAS., அவர்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.Com.BL., ஆகியோர் முன்னிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் என்ற அடிப்படையில் போலீஸ் அக்கா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீஸ் அக்காவாக நியமிக்கப்பட்ட பெண் காவலரின் செல்போன் நம்பர் QR Code-ஐ அந்தந்த பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் அனைவரின் பார்வைக்கும் படும்படியாக வைத்து, அதன் மூலம் பெண்கள் தங்களுக்கான பாதிப்புகளை இரகசியமாக அந்த பெண் காவலர்களை அழைத்து தெரிவிக்கலாம் என்பதே இதன் முக்கிய நோக்கம். அந்த போலீஸ் அக்காவின் செல்போன் நம்பரை QR Code-ஆக மாற்றி Wall poster ஆக பள்ளி, கல்லூரிகளில் ஒட்டப்படும். QR Code-ஐ ஸ்கேன் செய்து கால் செய்வதன் மூலம் போலீஸ் அக்காவை தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் வழக்கு பதிவாகி தங்களது விவரம் வெளியே தெரிந்துவிடுமோ என்று பெண்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில், எந்த நேரத்தில் அழைத்தாலும் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் உங்களது இருப்பிடம் குறிப்பிட்டு செய்தி அனுப்பினாலும் உடனுக்குடன் அந்த போலீஸ் அக்கா உங்கள் இருப்பிடம் அறிந்து அந்த இடத்திற்கே வருவார். உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து அதற்கேற்றாற் போல் உங்கள் விவரங்களை வெளியே தெரிவிக்காமல், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மட்டும், உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து, சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வார். போலீஸ் அக்காவை காவலர்கள் என்று அஞ்சி ஒதுக்க வேண்டியதில்லை. அவர்களை தங்கள் உறவினர்களை அழைப்பது போல் ‘அக்கா’ என்றே அழைக்கலாம். பெண்கள் தங்கள் அக்காவிடம் எவ்வித அச்சமும் இன்றி தங்களது சங்கடங்களை பகிர்வது போல போலீஸ் அக்காவிடமும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளலாம். நேரடியான பாதிப்புகள் என்பது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களான Social Media WhatsApp, Twitter, Instagram, Facebook மூலம் செய்யப்படும் அவதூறுகள் குறித்தும் போலீஸ் அக்காவிடம் தெரிவிக்கலாம்.