கோவை : கோவை நகரில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவை போலீஸ் பயிற்சி வளாகத்தில் (பி.ஆர்.எஸ்.) ராஜேந்திரன் என்ற போலீஸ்காரரின் தாயார் கனகம் (வயது 75) குடியிருந்து வருகிறார். நேற்று மாலை 6.30 மணியளவில் மூதாட்டி கனகம் நடைபயிற்சிக்காக வளாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் நைசாக வந்த ஒரு வாலிபர், கனகத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு பாப்பநாயக்கன்பாளையம் சாலை வழியாக தப்பி ஓடிவிட்டான். நகையை பறிகொடுத்த கனகம் கூச்சல் போட்டார். போஸ்காரர்கள் உள்பட பலரும் வந்தநிலையில் அந்த வாலிபரை பிடிக்க முடியவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதேபோல், சக்திவேல் என்ற போலீஸ்காரரின் 70 வயது தாயாரிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. 2 சம்பவங்களிலும் ஈடுபட்ட ஆசாமி ஒரே ஆளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்டுகிறது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்