திருவண்ணாமலை: போளூர் அருகே வம்பலூர் செய்யாற்றுப் படுகையில் காயங்களுடன் மர்மமான முறையில் முரளி என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் துரத்தி சென்று கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் விசாரணையில் திருப்புமுனையாக விவசாய நிலத்தில் எலி மற்றும் காட்டுப்பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி முரளி உயிரிழந்தது அம்பலம். அதே கிராமத்தை சேர்ந்த தந்தை பாலசுந்தரம் அவரது மகன் சிவக்குமார் ஆகிய இருவர் கைது. போளூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் பேட்டைத்தோப்பு கிராமத்தில் மாட்டுவண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த முரளி (வயது 30) என்பவரை பிடிக்க போலீசார் துரத்தி சென்றதாகவும் மறுநாள் பிரேதமாக கண்டெடுக்கப் பட்டதாகவும் உறவினர்கள் போலீசார் மீது குற்றச்சாட்டு கூறி வந்தனர். .
இந்நிலையில் இறந்த முரளி வீட்டின் பின்புறம் அதே கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் வயல்வெளியில் எலி மற்றும் காட்டுபன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் முரளி சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மறுநாள் 16 -ந் தேதி அதிகாலை பாலசுந்தரம் மற்றும் அவரது மகன் சிவகுமார் ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தில் போடப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி முரளி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக முரளியின் சடலத்தை நிலத்தின் அருகே செய்யாற்று படுகையில் முட்புதரில் தூக்கி போட்டு உள்ளனர்.
மாலையில் முரளியின் சடலத்தை கண்டெடுத்த உறவினர்கள் போலீசார் துரத்தி சென்று அடித்து கொன்று விட்டதாக கூறி முரளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து இரவு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முரளியின் உறவினர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதின்பேரில் பிரேதத்தை எடுக்க சம்மதித்தனர். பின்னர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முரளி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையில் திருப்புமுனையாக பாலசுந்தம் விவசாய நிலத்தில் எலி மற்றும் காட்டுப்பன்றிக்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி முரளி இறந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மற்றும் அவரது மகன் சிவகுமார் ஆகிய இருவரையும் மனித உயிருக்கு ஆபத்து என தெரிந்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து தந்தை – மகன் இருவரையும் கைது செய்து உள்ளனர்.