கோவை: கொரோனா இரண்டாம் அலையால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பலரும் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் உள்ள போலீசார் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளதால், போலீசார் தங்குவதற்காக தனியார் லாட்ஜ்களில், 10 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறுகையில்,”போலீசார் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தேவையான முகக்கவசம், சானிடைசர், கையுறை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஏழு லாட்ஜ்களில் போலீசாருக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.