மதுரை : மதுரை மாவட்ட, காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வாகன திருட்டுகளில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 19 உயர் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்தில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிராவயலைச் சேர்ந்த சின்னையா மகன் அழகுமணிகன்டன் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் கம்பூரைச் சேர்ந்த இராஜமாணிக்கம் மகன் அரசு ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 உயர் ரக ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனங்களும் 2 ஸ்கூட்டி ஆக்டிவா வாகனங்களும் ஒரு பல்சர் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்தில் இரண்டு வெவ்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு சிறார் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பல்சர் 125 CC மற்றும் ஒரு ஸ்பிளெண்டர் ஆகிய இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருமங்கலம் மற்றும் பேரையூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 12 வெவ்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட ஒரு சிறார் உட்பட மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து 19 உயர் ரக இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், வெகுவாக பாராட்டியுள்ளார்கள். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.விஜயராஜ்