கோவை : இரும்பு பொருட்களை அனுப்பியதுபோல் போலி ரசீது மூலம் ரூ.25½ கோடி வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். கோவை மண்டல ஜி.எஸ்.டி. புலனாய்வு அலுவலகத்துக்கு உள்பட்ட ஓசூர் பிரிவு ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ஒசூரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 19-ந் தேதி ஒசூரில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.141 கோடி மதிப்பில் இரும்பு பொருட்களை ஒசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியது போலவும், ஜி.எஸ்.டி. செலுத்தியது போலவும் போலியாக ரசீது தயாரித்து உள்ளனர். இதன் மூலம் ரூ.25 கோடியே 40 லட்சத்தை அந்த தொழில் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவன தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இந்த சோதனையின் போது போலி ரசீது புத்தகம், காசோலை புத்தகம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில், தனக்கு வேண்டியவர்களின் பெயரில் 5 விதமாக ஜி.எஸ்.டி. எண்களை பதிவு செய்தும், உறவினர்கள், நண்பர்களின் ‘பான்’ எண்களை கொண்டு பொருட்களை அனுப்பாமல் வரி ஏய்ப்பு செய்ததும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் உள்பட 5 பேரிடம் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்