சிவகங்கை : சிவகங்கை காரைக்குடி முத்துாரணிப் பகுதியில் ஏ.கே.நிதி நிறுவனம் என்ற பெயரில் அன்பு என்ற அன்பழகன் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். இவரின் கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த ஷேக் மதார் என்பவர் ரூ.1 கோடி கடன் கேட்டுள்ளார். அவரிடம் அன்பு ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தினால் ரூ1.கோடி கடன் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் தன்னிடம் கோடிகோடியாக பணம் இருப்பதாகவும் தேவையான பணத்தை குறைந்த வட்டியில் தருவதாகவும் கூறி கட்டுக் கட்டாக பணத்தையும் காட்டியுள்ளார். இதைப் பார்த்தவுடன் ஷேக் மதார் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார்.
குறைந்த வட்டியில் கடனாக ரூ.1 கோடி கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்த ஷேக் மதாருக்கு அதிர்ச்சியே கிடைத்தது. பேசிய படி கடன் தொகையையும் கொடுக்காமல் கட்டிய ரூ.10 லட்சத்தையும் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இது போல் காரைக்குடி முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி மகாலட்சுமி ரூ.10 லட்சம் கடன் அன்புவிடம் கேட்டுள்ளார். முதலில் ரூ.5 லட்சம் கொடுத்தால் 10 நாட்களில் ரூ.15 லட்சமாக தருவதாக அன்பு தெரிவித்துள்ளார். இவரிடமும் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பதைக் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி நகைகளை அடகு வைத்து ரூ.5 லட்சத்தை அன்புவிடம் கொடுத்துள்ளார். இவருக்கும் அன்பு பேசிய படி பணத்தை கொடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட ஷேக் மதார் மற்றும் மகாலட்சுமி இருவரும் காரைக்குடி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் செய்தனர். அப்போது அன்புவிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புகாரை வழக்காப் பதிவு செய்து அன்பு வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை செய்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை காவல் துறையினர் கைப்பற்றி பார்த்த ரூபாய் கட்டின் மேல் பகுதியில் ரூ.500 தாள் மற்றுமே இருந்துள்ளது. கட்டின் உள்ளே போலி ரூ.500 தாள்கள் இருந்துள்ளதை கண்டறிந்தனர். இதனையடுத்து அன்பு மற்றும் அவரிடம் மேலாளராக பணிபுரிந்த ஆசிக் இப்ராகிம் இருவரையும் கைது செய்தனர்.மோசடி பேர்வழியான அன்பு தனது பிறந்தநாள் மற்றும் தீபாவளி, பொங்கல் தினங்கள் அன்று பல உதவிகள் செய்வது போல் விளம்பரம் காட்டி குறைந்த வட்டியில் கடன் என்று கவர்ச்சியான திட்டத்தை அறிவித்து போலியான பணத்தை கட்டுக்கட்டாக வைத்துக் கொண்டு உண்மையான பணக்கட்டு போல் காண்பித்து பலரிடம் பணமோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி