நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், போலி நகைகள் அடகு வைத்து பணம் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன், கூட்டுறவு சங்கத்தில் எழுத்தாளராக பணியாற்றிய சலோன் மணி, சிவலிங்கம் சுந்தரராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மல்லசமுத்திரம் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குறிப்பாக வங்கி இயக்குநர்களின் ஒருவரான கிருஷ்ணசாமி, 14 வங்கி கணக்குகளில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.11 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திருச்செங்கோடு சரக கூட்டுறவு வங்கிகளின் துணைப் பதிவாளர் வெங்கடேசன் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணசாமி, சரோமணி, சிவலிங்கம், சுந்தரராஜன் மற்றும் கூட்டுறவு வங்கியின் உறுப்பினர்கள் 6 பேர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.