தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்படி கிராம சர்வே எண்ணிற்கு UDR “அ” பதிவேட்டில் கருப்பசாமி பெயர் பட்டா எண் 121-ன் படி தாக்கலாகியுள்ளது.
கருப்பசாமி மேற்படி நிலத்திற்கு தீர்வை செலுத்தி அனுபவித்து வந்து 13.05.2007 அன்றும் கருப்பசாமியின் மனைவி கனியம்மாள் என்பவர் கடந்த 18.11.2014 அன்றும் இறந்துவிட்டனர். இதனையடுத்து கருப்பசாமிக்கு ஹரிராமகிருஷ்ணன் உட்பட மாரியம்மாள், கந்தசாமி, கதிரேசன், கவிதா, மகேஷ்குமார் ஆகிய 6 பேர்கள் வாரிசு என தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக ந.மு.844/2015, ந.மு.ஆ4/9839/2015, நாள் 08.07.15-ன் படி வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி சொத்தானது மாரியம்மாள், ஹரிராமகிருஷ்ணன், கந்தசாமி, கதிரேசன், கவிதா, மகேஷ்குமார் ஆகிய 6 பேர்களுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது.
இந்நிலையில் கருப்பசாமியின் வாரிசுகள் மாப்பிள்ளையூரணி கிராமம், கோமஸ்புரத்தில் குடியிருக்கவில்லை என்ற விபரத்தினை தெரிந்த கருப்பசாமியின் உடன்பிறந்த சகோதரர் பொட்டல்காடு மல்லிகா நகரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் 1-வது குற்றவாளி பூபதி மற்றும் பூபால்ராயபுரம் 5-வது தெருவை சேர்ந்த சங்கரசேகரன் மகன் 5-வது குற்றவாளி மகேஷ் ஆகியோர்கள் கூட்டுச்சேர்ந்து மேற்படி கருப்பசாமியன் சொத்தை மோசடியாக பத்திரம் பதிவு செய்து அபகரித்து யாருக்காவது கிரையம் செய்து கொடுக்கலாம் என்ற கெட்ட எண்ணத்தில் மேற்படி சொத்திற்கு கருப்பசாமியின் பெயரில் உள்ள பட்டா எண் 121-ல் முத்துசாமி பெயரை சேர்த்து போலியான கூட்டு பட்டாவை தயார் செய்தும், முத்துசாமி கடந்த 2014ம் ஆண்டு வரை உயிரோடு இருந்து வந்த நிலையில் கடந்த 21.03.2007 அன்று இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி சிதம்பரம் அதற்கு முன்னரே இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு 1-வது எதிரி பூபதி வாரிசு போன்று தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக ப.மு.7565/2007, நாள் 11.06.2007-ன் படி போலியான வாரிசு சான்று தயார் செய்துள்ளார்.
மேற்படி ஆவணத்தை உண்மையான ஆவணமாக பயன்படுத்தி கருப்பசாமிக்கு பாத்தியப்பட்ட மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலத்தில் 18.52 செண்டு நிலத்தை முத்துசாமிக்கு பாத்தியப்பட்டதாகவும், முத்துசாமி இறப்புக்கு பின்னர் 18.52 செண்டு நிலத்தை 1-வது எதிரி பூபதி தூத்துக்குடி கீழுர் சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவண எண் 839/2016, நாள் 11.03.2016-ன் படி மகேஷ் என்பவரின் மனைவியான 2-வது குற்றவாளி ஷர்மிளா பாக்கியா என்பவருக்கு மோசடியாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். ஷர்மிளா பாக்கியா என்பவரும் மேற்படி நிலம் முத்துசாமிக்கு பாத்தியம் இல்லை என்று தெரிந்திருந்தும், போலியான வாரிசு சான்று, போலியான கூட்டு பட்டா ஆகியவற்றை பயன்படுத்தி மேற்படி மோசடி கிரைய ஆவண எண் 839/2016-ஆனது பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிந்தே ஷர்மிளா பாக்கியா கிரையம் பெற்றுள்ளார். மோசடி கிரைய ஆவண எண் 839/2016-ல் மேற்படி விபரம் தெரிந்தே 1-வது குற்றவாளி பூபதியின் மனைவியான 3-வது குற்றவாளி மாலா மற்றும் மகேஷ்க்கு தெரிந்த நண்பரான தூத்துக்குடி போல்பேட்டையினை சேர்ந்த லெட்சுமணன் மகனான 4-வது குற்றவாளி லோகநாதன் ஆகியோர்கள் காட்சியாக கையொப்பம் செய்துள்ளர்கள்.
இதனையடுத்து மேற்படி வழக்கின் 1-வது குற்றவாளி பூபதி என்பவரை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சம்பத் அவர்கள் உத்தரவின்படி காவல் ஆய்வாளர் திருமதி. தேவி தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார், முதல் நிலைக் காவலர்கள் திரு. சித்திரைவேல் மற்றும் திரு. பன்னீர் செல்வம் ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் இன்று (09.11.2022) பொட்டல்காடு பகுதியில் உள்ள குற்றவாளி பூபதி வீட்டு முன்பு வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.