திருவண்ணாமலை : திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் திரு .சுப்பிரமணியன், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர் திடீரென அங்கிருந்து ஓடினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் அவரை சோதனை செய்தபோது அவரிடம் சில மாத்திரைகள் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாத்திரைகள் வலி நிவாரண மாத்திரைகள் என்பதும் அதை போதைக்காக பயன்படுத்தலாம் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபர் திருவண்ணாமலை அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்த சப்தகிரி (20), என்பதும், அந்த மாத்திரைகளை அவர் போதைக்காக பயன்படுத்தி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அதை விற்பனையும் செய்துள்ளார். இந்த வகை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது. கஞ்சா பயன்படுத்தி வந்த அவர் கஞ்சா கிடைக்காததால் அதற்கு மாற்றாக இந்த மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு திரு . குணசேகரன், ஆகியோர் உத்தரவின் பேரில் மருந்தக ஆய்வாளர் கோகிலா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் சோதனை செய்தனர். தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.