சென்னை: ஒடிசாவில் இருந்து போதை மாத்திரைகளை சாலை மார்க்கமாக சென்னைக்கு கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான 2 பேர் 2 பைகளை வைத்திருந்ததை கண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 1300 போதை மாத்திரைகள் மற்றும் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் மெரட்டூர் பகுதியை சேர்ந்த அஜய்(22). மற்றும் வடகரை பகுதியை சேர்ந்த விஸ்வா (20). ஆகியோர் எனவும், ஒடிசாவில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி இரயில் மூலம் சூளூர்பேட்டை இரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்தி சென்று சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா, 1300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு