திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போதை பொருள் தடுப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நாள்தோறும் காவல்துறையினர், போதை தடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி அருகே குட்கா, போதை மாத்திரை உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறதா என அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர், மற்றும் துணைபோலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த ரகசிய விசாரணையில் தகவல் தெரிந்தால் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் மாவட்டத்தில், எந்த பகுதியிலும் ஒரு துளி கஞ்சா கூட இருக்கக் கூடாது. கஞ்சா, போதை பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பத்தூர் திகழ வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், உள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் ரகசியம் காக்கப்படும். போதைப் பொருள்கள் சப்ளை செய்யும் சமூக விரோத கும்பல்கள் யார் யார் என கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.