திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், போதை பொருள் தடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:- மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல் துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் பயன்பாட்டை தவிர்க்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு அற்ற வளாகமாக பள்ளிகள், கல்லூரிகள் மாற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஏழுமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, உதவி கலெக்டர்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), மா.தனலட்சுமி (ஆரணி), மந்தாகினி (செய்யாறு), துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
















