மதுரை : மதுரையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பவர்கள் மற்றும் அதனை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஜெய்ஹிந்த்புரம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், தலைமையில் தனிப்படை அமைத்து அதனை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தெற்குவெளிவீதி பகுதியில் ஒருவர் புகையிலை பொருட்களை கடைக்கு விற்பனை செய்ய கொண்டு வருவது தெரியவந்தது. அவரை உதவி கமிஷனர் தலைமையில் தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், முருகன், போலீஸ்காரர்கள் மணி, ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை விசாரித்த போது தெற்குவெளிவீதி, பாண்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்பதும், புகையிலை பொருட்களை கிராமப்புறங்களில் உள்ள கடைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 35 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேர் கைது பேரையூர் போலீசார் ரோந்து சென்ற போது பண்டாரம்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் (23) என்பவர் 12 கிலோ புகையிலை பொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக செந்தில்குமார் (48), காளிதாஸ் (28), மேலச்சின்னனம்பட்டியில் செங்குட்டுவன் (63) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி