வேலூர் : வேலூர் குடியாத்தம் நகரில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, உள்ளிட்ட போலீசார் போதை பொருட்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது குட்கா மற்றும் ஹான்ஸ் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குடியாத்தம் அல்லிப்பேட்டையை சேர்ந்த நுஷரத் ஷாகித் (46), என்பவரிடம் விசாரணை நடத்திய போது, குடியாத்தம் தரணம் பேட்டை இப்ராஹிம் தெருவில் உள்ள முனவர் பாஷா என்பவரது வீட்டில் இருந்து போதை பொருட்களை வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்வது தெரிய வந்தது.
இதனையடுத்து இப்ராஹிம் சாகிப் தெருவில் உள்ள வீட்டை போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 125 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. முனவர் பாஷா என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் நேதாஜி சவுக் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போதை பொருட்களை கொண்டு வந்த குடியாத்தம் கள்ளூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஜமால் (29) என்பவரை போலீசார் கைது செய்து அவர் அளித்த தகவலின் பேரில் நெல்லூர்பேட்டை கிழக்கு மாட வீதியைச் சேர்ந்த நேரு (50), என்பவரையும் போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2½ லட்சம்மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்