கோவை: டெல்லியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளை ரயில் மூலம் கடத்தி திருப்பூருக்கு கொண்டு செல்வதாக ரகசிய தகவல் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.இதையடுத்து அவர்கள் மதுரையில் செயல்பட்டு வரும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் மதுரையில் இருந்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கோவைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
அந்த சமயத்தில் டெல்லியில் இருந்து ஒரு ரயில் கோவைக்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த ரயிலில் வந்த நைஜீரிய வாலிபர் ஒருவர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 2 கிலோ 300 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து போலீசார் அந்த நைஜீரிய வாலிபரை கைது செய்தனர். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.